தமிழக அரசின் உத்தரவை அடுத்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 ஆயிரம் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
அரசு அனுமதியளித்ததை தொடர்ந்து விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2 ஆயிரம் கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் நேற்று முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விழா நாட்களில் கோவில்கள் திறக்க அனுமதியில்லை என்றும், பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது படிப்படியாக கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதையடுத்து ஊரடங்கிலும் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கோவில்களையும் திறந்து, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது.
2 ஆயிரம் கோவில்கள் திறப்பு
அதன்படி விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரம் கோவில்கள் நேற்று காலை முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. விழுப்புரம் கைலாசநாதர், ஆஞ்சநேயர், வைகுண்டவாச பெருமாள், வீரவாழியம்மன், பூவரசங்குப்பம், பரிக்கல் லட்சுமி நரசிம்மர், திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர், தும்பூர் நாகம்மன், மயிலம் முருகன், மேல்மலையனூர் அங்காளம்மன், திண்டிவனம் லட்சுமி நாராயணபெருமாள், சிங்கவரம் ரங்கநாதர், திருவக்கரை வக்ரகாளியம்மன், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர், கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்களும் திறக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து பக்தர்கள் உற்சாகத்துடனும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் அதே நேரத்தில் முகக்கவசம் அணிந்தபடியும் கோவிலுக்கு சென்று சமூக இடைவெளியை பின்பற்றி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story