கண்ணமங்கலம் அருகே 2 மின் பணியாளர்கள் பணியிடை நீக்கம்
2 மின் பணியாளர்கள் பணியிடை நீக்கம்
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே உள்ள அரியபாடி ஊராட்சி, சோமந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் ராஜ்கமல் (வயது 24). இவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு ஒண்ணுபுரம் மின் வாரிய அலுவலகத்தில் கடந்த 4½ மாதங்களாக கேங்மேனாக வேலை செய்து வந்தார்.
கடந்த 7-ந்் தேதி அத்திமலைப்பட்டு-ஆரணி ரோட்டில் செல்லியம்மன் கோவில் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மின் வாரிய அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், இறந்த ராஜ்கமல் கடந்த நான்கரை மாதங்களுக்கு முன்பு தான் புதிதாக கேங்மேன் பணியில் சேர்ந்துள்ள நிலையில் போதிய அனுபவம் இல்லாத அவரை மின்கம்பத்தில் ஏற அந்த பிரிவில் உள்ளவர்கள் அனுப்பியது தெரியவந்தது.
இது தொடர்பாக கண்ணமங்கலம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர்.நடராஜனின் பரிந்துரையின்பேரில் ஒண்ணுபுரம் துணைமின் நிலைய மின் கம்பியாளர் குமரேசன், மின்பாதை ஆய்வாளர் துளசி ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story