வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.8½ லட்சம் மோசடி
உவரி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை:
உவரி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரூ.8½ லட்சம் மோசடி
நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழையைச் சேர்ந்தவர் டெரஸ் பெர்னாண்டோ. இவருடைய மகன் ஜெபஸ் (வயது 32). இவரிடம், கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த சகாய பார்த்தீபன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு அதிக பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய ஜெபஸ், சகாய பார்த்தீபனின் வங்கி கணக்குக்கு ரூ.8½ லட்சம் அனுப்பி உள்ளார். பின்னர் சகாய பார்த்தீபன், ஜெபசுக்கு வேலை எதுவும் வாங்கி தராமலும், பணத்தையும் திருப்பி வழங்காமலும் இருந்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சகாய பார்த்தீபனை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று வள்ளியூர் அருகே கண்ணங்குளத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் கண்ணன் (28). இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில், ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை புதுப்பிப்பதற்கு ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்குமாறு கூறியிருந்தது.
இதனை உண்மை என்று நம்பிய கண்ணன் தனது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை, அந்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி உள்ளார். இதையடுத்து சிறிதுநேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.61 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த கண்ணன், இதுகுறித்து நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story