குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்க அனுமதிக்க வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி:
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்க அனுமதிக்க வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றாலம் சீசன்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இடையிடையே இதமான வெயில் அடிக்கும்.
இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.
இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருவார்கள்.
தண்ணீர் கொட்டுகிறது
கடந்த 2 ஆண்டுகளாக குற்றாலத்தில் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
தற்போது குற்றாலம் மலைப்பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதனால் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவியில் தண்ணீர் பரவலாக பாய்ந்து வருகிறது. இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி, குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் கொட்டுகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
கடந்த 2 ஆண்டுகளாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் இங்குள்ள வியாபாரிகள், ஆட்டோ-வேன் டிரைவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். தற்போது அரசு நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி அளித்துள்ளது. சில சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் செல்வதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் குற்றாலத்தில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
எனவே இந்த தடையை அகற்றி குற்றாலத்தில் குளிப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story