சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த நிலைவாசல் சரிந்து விழுந்து சிறுமி பலி
சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த நிலைவாசல் சரிந்து விழுந்ததில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி பலியானார்.
தஞ்சாவூர்;
சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த நிலைவாசல் சரிந்து விழுந்ததில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி பலியானார்.
விளையாடிய சிறுமி
தஞ்சை வடக்கு வாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர்(வயது 34). கொத்தனார். இவருடைய மனைவி மேகலா. இவர்களது இளைய மகள் பிரீத்தி(வயது7). இவள் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். ஸ்ரீதர் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த வீட்டில் பொருத்தப்படாத நிலைவாசல் ஒன்று சுவரில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரீத்தி வீட்டில் பொருத்தப்படாமல் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்த நிலைவாசலை பிடித்து விளையாடியபோது, அந்த நிலைவாசல் திடீரென அவள் மீது சரிந்து விழுந்தது.
பரிதாப சாவு
நிலைவாசலுடன் சேர்த்து பிரீத்தியும் கீழே விழுந்தாள். இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் நிலைவாசலும் நெற்றியில் விழுந்தது. பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவளை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு பிரீத்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story