மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ஒரத்தநாடு அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உழவு பணி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள தலையாமங்கலம் புதுத் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 59). விவசாயி. மேலும் இவர் அ.ம.மு.க. ஊராட்சி கழக செயலாளராகவும் இருந்து வந்தார். ஜெயராமன் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஒத்திக்கு எடுத்து அதில் சாகுபடி செய்து வந்தார்.
நேற்று அந்த நிலத்தில் நடவு நடுவதற்கான பணியில் ஜெயராமன் ஈடுபட்டார். இதற்காக நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவருடன் டிராக்டரில் வயலுக்கு சென்று உழவு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
அப்போது ஜெயராமன், வயலின் ஒரு பகுதியில் இருந்த மேடு- பள்ளங்களை சீர் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வயலுக்கு மேலே சென்ற மின்கம்பி திடீரென அறுந்து ஜெயராமன் வேலை செய்த வயலுக்குள் விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனின் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடலை வாங்க மறுத்து சாலை மறியல்
ஜெயராமனின் உடல் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களுடன் சேர்ந்து ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரத்தநாடு பகுதியில் பழுதடைந்துள்ள மின்கம்பிகள் அறுந்து விழும் சம்பவங்களால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனால் பழைய மின் கம்பிகளை மாற்றிவிட்டு, புதிதாக மின் கம்பிகள் அமைத்து தர வேண்டும். மின்சாரம் தாக்கி பலியான ஜெயராமன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தை
இதனால் மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு ஜெயராமன் உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஜெயராமன் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story