ஓமலூர் அருகே ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி-ஒரு மணி நேரத்துக்கு பிறகு உடல் மீட்பு
ஓமலூர் அருகே ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியானார். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
ஓமலூர்:
ஓமலூர் அருகே ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியானார். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
கடல் போல் ஏரி
ஓமலூரை அடுத்த கே.என்.புதூர் பகுதியில் பெரிய சக்கிலிச்சி ஏரி உள்ளது. தற்போது பெய்த மழை காரணமாக இந்த ஏரி நிரம்பி, கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆயுதபூஜை என்பதால் அந்த பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை ஏரியின் உபரி நீர் வெளியேறும் வாய்க்காலில் சுத்தம் செய்ய திரண்டனர். மேலும் ஏரியில் ஆனந்தமாக குளித்தனர்.
இதேபோல் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமாரின் மகனான ஈஸ்வரன் (வயது 17) என்பவரும், தனது நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்றார். ஈஸ்வரன் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
மாணவன் பலி
நண்பர்கள் அனைவரும் ஏரியில் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஈஸ்வரன் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அவரது நண்பர்கள் காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, ஈஸ்வரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பரிசலில் சென்றும் அவனை தேடினர். அப்போது ஈஸ்வரன் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story