நல்லம்பள்ளி அருகே பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது பரபரப்பு வாக்குமூலம்
நல்லம்பள்ளி அருகே பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெண் கொலை
நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டி சென்னியன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி தேன்மொழி (வயது 34), இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். தேன்மொழி பாளையம்புதூரில் உள்ள தனியார் நூல் மில்லில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி அவரது மொபட் ஊத்துப்பள்ளம் அருகே வனப்பகுதியை ஒட்டிய ஒரு வீட்டின் முன்பு நின்றது. தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் மொபட்டை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள வனப்பகுதியில் தேன்மொழி முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாகல்பட்டியை சேர்ந்த அசோகன் (30) என்பவர் தேன்ெமாழியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
கழுத்தை நெரித்தேன்
தேன்மொழியும், நானும் ஒரே நூல்மில்லில் பணியாற்றி வந்தோம். அப்போது எங்களுக்குள் கள்ளகாதல் ஏற்பட்டது. அவ்வப்போது நாங்கள் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தோம். கடந்த செப்டம்பர் 24-ந் தேதி கோவிலுக்கு செல்வதாக கூறி வனப்பகுதிக்கு அழைத்து சென்று தேன்மொழிக்கு மாம்பாழ சாற்றில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தேன்.
பின்னர் மயக்க நிலைக்கு அவள் சென்றவுடன் கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க நகைகள், வெள்ளி கால் கொலுசுகள், செல்போன், இருசக்கர வாகன சாவியை எடுத்துக் கொண்டேன். தொடர்ந்து தேன்மொழியின் வாயில் துணியை வைத்து அடைத்து, கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் நகையை சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் உள்ள நகை கடை ஒன்றில் விற்று பணம் பெற்றேன். பின்னர் மீண்டும் வழக்கம் போல் நூல்மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நகைக்கான கள்ளக்காதலியை, கள்ளக்காதலனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story