நோணாங்குப்பம் படகு குழாமில் மீண்டும் நுழைவு கட்டணம் வசூல்


நோணாங்குப்பம் படகு குழாமில் மீண்டும் நுழைவு கட்டணம் வசூல்
x
தினத்தந்தி 16 Oct 2021 10:41 PM IST (Updated: 16 Oct 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

நோணாங்குப்பம் படகு குழாமில் ரத்து செய்யப்பட்டு இருந்த நுழைவு கட்டண வசூல் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிருப்திக்குள்ளானார்கள்.

அரியாங்குப்பம், அக்.
நோணாங்குப்பம் படகு குழாமில் ரத்து செய்யப்பட்டு இருந்த நுழைவு கட்டண வசூல்  மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிருப்திக்குள்ளானார்கள்.
சுற்றுலா பயணிகள் அதிருப்தி
புதுச்சேரி மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கால் பதிக்க தவறுவதில்லை. படகு மூலம் சுண்ணாம்பாறு, கடலில் கலக்கும் முகத்துவார பகுதியான பாரடைஸ் பீச்சுக்கு சென்று உல்லாசமாக குளித்து மகிழ்வது வழக்கம். 
அதிலும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்களில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வந்து குவிவார்கள்.
இங்கு முன்பு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பிறகு படகு சவாரிக்கு டிக்கெட் எடுப்பது, படகுகளில் செல்வது என 3 முறை வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்துக்கு சுற்றுலா பயணிகள் தள்ளப்பட்டனர். இந்த நடைமுறையால் படகு குழாமிலேயே அரை நாள் பொழுது வீணானது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர். 
இதை அறிந்ததும் அப்போது கவர்னராக இருந்த கிரண்பெடி நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்ததுடன் டிக்கெட் எடுத்து நேரடியாக படகுக்கு செல்லக்கூடிய வகையில் நடைமுறையை மாற்றி அமைத்தார். இதனால் சுற்றுலா பயணிகள் எளிதில் சென்று வர ஏதுவாக இருந்தது.
நுழைவு கட்டணம் வசூல்
இந்தநிலையில் படகு குழாம் நுழைவுக் கட்டண முறை நேற்று முதல் திடீரென்று அமலுக்கு வந்தது. அதாவது தலா ரூ.10 கட்டணம் விதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட தாமதத்தால் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் நீண்டவரிசையில் நின்றனர்.
நுழைவு கட்டணம் செலுத்தி விட்டு படகு சவாரிக்கு டிக்கெட் எடுக்க வரிசை, அதன்பின் படகுகளில் பயணம் செய்ய வரிசை என சுற்றுலா வந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஆயுதபூஜை, வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து குவிந்தனர். கடும் வெயில் மற்றும் நுழைவு கட்டண வசூல் நடவடிக்கையாலும் முதியவர்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
கூடுதல் படகுகள் விடப்படுமா?
அடுத்ததாக தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல் என பண்டிகைகள் அணிவகுப்பதால் அப்போது படகு குழாமில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். எனவே அதற்கு ஏற்ப கூடுதல் எண்ணிக்கையில் படகுகள் இயக்க வேண்டும், நுழைவுக் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என்று புதுவை அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story