மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையில் கரும்பு கட்டுகளுடன் ஒருவாரமாக காத்து நிற்கும் டிராக்டர்கள்
மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையில் கரும்பு கட்டுகளுடன் ஒருவாரமாக காத்து நிற்கும் டிராக்டர்கள் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை-1 உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகளை அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்த ஆலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரவை பணி தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஆலை இயங்கவில்லை என்று தெரிகிறது. ஆலையில் சுமார் 8 ஆயிரம் டன்னுக்கு மேற்பட்ட கரும்புகள் தேக்கம் அடைந்து கிடப்பதாக தெரிகிறது. கரும்பு கட்டுகளை ஏற்றி வந்த டிராக்டர்களும் ஆலை வளாகத்தில் ஒருவாரத்துக்கு மேலாக காத்து நிற்பதால் கரும்பின் எடையும் குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி விவசாயிகள் மற்றும் டிராக்டர் டிரைவர்களும் ஆலைக்கு தினமும் வந்து செல்வதால் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் டிராக்டரில் உள்ள கரும்புகளை இறக்காதது குறித்து ஆலை அதிகாரிகளிடம் டிராக்டர் டிரைவர் மற்றும் விவசாயிகள் கேட்டனர். இதற்கு எந்திரம் பழுதாகி இருப்பதாகவும் அதை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து ஆலை எப்போது இயங்கும் என்று கேட்தற்கு அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகளும், டிரைவர்களும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூடிய விரைவில் பழுதடைந்த எந்திரத்தை சரிசெய்து மீண்டும் ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து விவசாயிகளும், டிரைவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story