வியாபாரி வீட்டில் நகைகள் திருட்டு
திண்டுக்கல் அருகே, வியாபாரி வீட்டில் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள பொன்னகரத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (வயது 44). இவர், சிறுமலை பழையூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 14-ந்தேதி ஆயுத பூஜையையொட்டி சிறுமலையில் உள்ள அவரது கடையில் சாமி கும்பிடுவதற்காக குடும்பத்துடன் சென்றார்.
அதன்பிறகு அவரும், அவரது குடும்பத்தினரும் 2 நாட்கள் அங்கேயே தங்கினர்.
பின்னர் நேற்று காலை, ஞானபிரகாசம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசுகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஞானப்பிரகாசம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த நாய், சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
---------
Related Tags :
Next Story