குழந்தை பிறந்த 18 நாளில் தாய் இறந்த பரிதாபம்


குழந்தை பிறந்த 18 நாளில் தாய் இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 16 Oct 2021 11:21 PM IST (Updated: 16 Oct 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கம் அருகே குழந்தை பிறந்த 18 நாளில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டைசேரி மேல்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). கூலி தொழிலாளி. இவருக்கும் பெங்களூரு அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த மோனிஷா (22) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வது பிரசவத்திற்காக சில தினங்களுக்கு முன்பு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோனிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. 

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வாலாஜா அரசு மருத்துவமனையில் இருந்து அய்யம்பேட்டைசேரியில் உள்ள வீட்டிற்கு தாயையும், சேயையும் குடும்பத்தினர் அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மோனிஷாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்ததும் திரும்பிய மோனிஷா வீட்டில் திடீரென மயங்கி  விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மோனிஷாவை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது வரும் வழியிலேயே மோனிஷா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவரது தந்தை ஜெயவேல் நேற்று காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

திருமணமாகி 4 ஆண்டுகளில ்மோனிஷா இறந்ததால் அது குறித்து அரக்கோணம் கோட்டாட்சியர் சிவதாஸ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

 குழந்தை பிறந்து 18 நாளில் தாய் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story