ராமேசுவரத்தில் உள் வாங்கிய கடல்


ராமேசுவரத்தில் உள் வாங்கிய கடல்
x
தினத்தந்தி 16 Oct 2021 11:33 PM IST (Updated: 16 Oct 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடியில் கடல் சீற்றமாக காணப்பட்ட நிலையில், ராமேசுவரத்தில் உள்வாங்கிய கடலால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேசுவரம், 

தனுஷ்கோடியில் கடல் சீற்றமாக காணப்பட்ட நிலையில், ராமேசுவரத்தில் உள்வாங்கிய கடலால் பரபரப்பு ஏற்பட்டது.

கடல் உள்வாங்கியது

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதலே வழக்கத்துக்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசத்தொடங்கியது. காற்றின் வேகம் நேரம் செல்ல செல்ல அதிகமானது. குறிப்பாக நேற்று மதியத்திற்கு பிறகு காற்றின் வேகம் மிக அதிகமாகவே இருந்தது. பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம் பகுதியில் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. 
பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் கடல் சீற்றமாக காணப்பட்டு வரும் நிலையில் ராமேசுவரம் ஓலைகுடா முதல் சங்குமால் கடற்கரை பகுதி வரை நேற்று வழக்கத்திற்கு மாறாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் உள்ள பவளப் பாறைகள் மற்றும் பாறைகள் அனைத்தும் தெளிவாக வெளியே தெரிந்தன. பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. சிப்பி சங்கு உள்ளிட்ட பல சிறிய உயிரினங்கள் தெளிவாக வெளியே தெரிந்த நிலையில் கடற்கரையில் கிடந்தன.

மீன்பிடிக்க தடை

இதேபோல் தனுஷ்கோடி பகுதியிலும் பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. குறிப்பாக எம்.ஆர்.சத்திரம் கடல் பகுதியில் உள்ள துறைமுகத்தில் மோதி கடல் அலையானது பல அடி உயரத்திற்கு மேல் நோக்கி சீறி எழுந்தன.தனுஷ்கோடி சாலை முழுவதும் மணலானது புழுதியாக பறந்து சென்றன. அரிச்சல்முனை பகுதியில் கடல் அலையின் வேகத்தால் கடல் நீரானது சாலை வரையிலும் வந்து சென்றன. கடந்த ஒருவாரத்திற்கு மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முதல் மீன்பிடிக்க செல்ல திட்டமிட்டிருந்தனர். 
ஆனால் பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டதால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.

Next Story