கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு; சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலுக்கு முயன்றவர்களால் பரபரப்பு
கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுத்ததால் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலுக்கு முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நொய்யல்,
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்
வீரபாண்டிய கட்டபொம்மனின் 222-வது நினைவு நாளையொட்டி கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி நெடுஞ்சாலை அருகே இருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விடுதலை களம் என்ற அமைப்பின் நிறுவனத்தலைவர் நாகராஜன் தலைமையில் 20 கார்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் 150-க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச் சாவடியில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் 4 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கி மற்றவர்களை திரும்பி செல்லுமாறு கூறினர்.
போக்குவரத்து பாதிப்பு
ஆனால் மற்ற வாகனங்களில் இருந்தவர்கள் தங்களையும் தோரணக்கல்பட்டி சென்று மாலை அணிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தங்களது வாகனங்களுடன் மறியலுக்கு முயன்றனர். இதனால் சேலத்தில் இருந்து கரூர், மதுரை, திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் பரமத்திவேலூர் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமரசம் அடைந்த அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story