வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலைக்கு முயற்சி


வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 17 Oct 2021 12:09 AM IST (Updated: 17 Oct 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் வாய்க்காலில் குதித்து தற்கொலை முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

குளித்தலை, 
தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி
கரூர் மாவட்டம் மாயனூரிலிருந்து குளித்தலை வழியாக திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை வரை தென்கரை வாய்க்கால் செல்கிறது. குளித்தலை பஸ் நிலையம் அருகே உள்ள சாலை வழியாக செல்லும் இந்த வாய்க்காலில் மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்குடன் வாய்க்காலில் குதித்துள்ளார்.
இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த ஒருவர் வாய்க்காலில் நீந்திச்சென்று அந்த மூதாட்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். தனது குடும்பத்தாருடன் வாழ பிடிக்காமலேயே தற்கொலை செய்து கொள்வதற்காக வாய்க்காலில் குதித்ததாக அந்த மூதாட்டி தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உறவினர்களுடன் செல்ல மறுப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கரூர் மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கரையாம்பட்டியை சேர்ந்த சின்னாகவுண்டர் மனைவி ராசம்மாள் (வயது 70) என்பது தெரியவந்தது. பின்னர் அந்த மூதாட்டியை குளித்தலையில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் மூதாட்டியின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த காப்பகத்திற்கு வந்த மூதாட்டியின் உறவினர்கள் மூதாட்டியை தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். இருப்பினும் குடும்பத்தாருடன் செல்ல மூதாட்டி மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து அந்த காப்பகத்திலேயே மூதாட்டி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Next Story