கொள்ளை அடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 வாலிபர்கள் ஆயுதங்களுடன் கைது
கொள்ளை அடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 வாலிபர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:
ஆயுதங்களுடன் நின்ற கும்பல்
திருச்சி மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட மணல்வாரித்துறை சாலையில் சிலர் ஆயுதங்களுடன் நிற்பதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது, அங்கு ஆயுதங்களுடன் நின்ற 6 பேர் கொண்ட கும்பல், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார்கள். இதையடுத்து போலீசார் 3 பேரை விரட்டிப்பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 3 பேரிடம் இருந்தும் அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பாண்டியனின் மகன் ஜான்சன் (வயது 25), அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாண்டியனின் மகன் சந்தோஷ் (22), பாலக்கரை கீழப்புதூர் முதல்வீதியை சேர்ந்த ராஜியின் மகன் சதீஸ்குமார் (22) என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் விஜய், ஹரிபிரசாத், பாரதி என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 6 பேரும் சேர்ந்து கொள்ளை அடிக்க சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்சன், சந்தோஷ், சதீஸ்குமார் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story