பெங்களூரு சிறையில் இருந்து சுதாகரன் விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில் பரப்பனஅக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வந்த சுதாகரன் நேற்று சிறையில் இருந்து விடுதலை ஆனார். அவருக்கு அ.ம.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெங்களூரு:
அபராதம் செலுத்தவில்லை
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு அளித்திருந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்தனர்.
அவா்கள் 3 பேரின் சிறைவாசம் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதியுடன் நிறைவு பெற்றிருந்தது. இதையடுத்து, சசிகலா, இளவரசி ஆகிய 2 பேரும் கோர்ட்டு விதித்த ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராத தொகையை செலுத்திவிட்டு விடுதலை ஆனார்கள். ஆனால் சுதாகரன் மட்டும் அபராத தொகையை செலுத்தாமல் இருந்து வந்தார்.
கூடுதலாக ஒரு ஆண்டு சிறை
பெங்களூரு தனிக்கோர்ட்டு உத்தரவுப்படி அபராத தொகையை செலுத்தாவிட்டால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அபராத தொகை செலுத்தாததால் சுதாகரன் பெங்களூருவில் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார். அவர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அபராத தொகை செலுத்தி இருந்தால், கடந்த ஜனவரி மாதமே சசிகலாவுடன், சுதாகரனும் விடுதலை ஆகி இருப்பார்.
கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க கோர்ட்டு உத்தரவிட்டு இருந்ததால், அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதம் அவர் சிறையில் இருந்து விடுதலை ஆக வேண்டும். ஆனால் சொத்துகுவிப்பு வழக்கில் ஏற்கனவே 123 நாட்கள் அவர் சிறை தண்டனை அனுபவித்திருந்ததால், முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யும்படி கோரி பெங்களூரு தனிக்கோர்ட்டில் சுதாகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
89 நாட்கள் முன்பாகவே...
அந்த மனுவை விசாரித்த கோர்ட்டும், 123 நாட்களில் விடுமுறை உள்ளிட்டவற்றை கழித்து 89 நாட்களை கணக்கில் எடுத்து கொண்டதுடன், அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய அனுமதி வழங்கியது. இதனால் சொத்துகுவிப்பு வழக்கில் கோர்ட்டு விதித்த 4 ஆண்டு, அபராத தொகை செலுத்தாததால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை என, அவரது ஒட்டு மொத்த தண்டனை காலமும் நேற்றுடன் நிறைவு பெற்றது.
சிறை தண்டனை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து சுதாகரன் விடுதலை செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. சுதாகரன் விடுதலை ஆவதால், அவரை வரவேற்க நேற்று காலையில் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு அ.ம.மு.க.வினர் திரண்டு வந்திருந்தனர்.
சுதாகரன் விடுதலை
பின்னர் நேற்று காலை 11.30 மணியளவில் பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து சுதாகரன் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து அவர் வெளியே நடந்து வந்தார். அப்போது அங்கு திரண்டு இருந்த அ.ம.மு.க.வினர் சுதாகரனுக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு ஆதரவாக கோஷங்களையும் எழுப்பினார்கள்.
அதைத்தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து சுதாகரன் உள்ளிட்டோர் காரில் ஏறி புறப்பட்டு சென்றனர். சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் விடுதலை ஆகி உள்ளனர். சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு குறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story