எருமப்பட்டி அருகே பெண், சிறுவன் மீது தாக்குதல்; டாஸ்மாக் விற்பனையாளர் கைது


எருமப்பட்டி அருகே பெண், சிறுவன் மீது தாக்குதல்; டாஸ்மாக் விற்பனையாளர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2021 9:48 PM IST (Updated: 17 Oct 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே பெண், சிறுவன் மீது தாக்குதல்; டாஸ்மாக் விற்பனையாளர் கைது

எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிபட்டி ஊராட்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி ரேவதி (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் 13 வயதுடைய இளைய மகன் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த நிர்மலா செல்வம் என்பவரின் பேரன், 13 வயது சிறுவனை திட்டியதாகவும், அதனால் கோபம் அடைந்த சிறுவன் நிர்மலா செல்வத்தின் பேரனை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த நிர்மலா செல்வம் சிறுவனை கண்டித்ததாக தெரிகிறது. 
இதனால் அழுது கொண்டே வீட்டுக்கு சென்ற சிறுவன் தனது அண்ணனிடம் நடந்ததை கூறினான். இதையடுத்து 2 மகன்களுடன் ரேவதி, அதே பகுதியில் உள்ள நிர்மலா செல்வத்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டதாம். அந்த சமயம் அங்கு வந்த நிர்மலா செல்வத்தின் மைத்துனர் கருணாகரன் (47) என்பவர் ரேவதியின் மூத்த மகனை தாக்கினாராம். மேலும் மண்வெட்டியால் ரேவதி மற்றும் அவருடைய தந்தை மாணிக்கத்தையும் தாக்கியதாக தெரிகிறது. 
இதில் காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரேவதி எருமப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறுவர்கள் மற்றும் பெண்ணை தாக்கியதாக கருணாகரனை கைது செய்தனர்.
 கைது செய்யப்பட்ட கருணாகரன் நாமக்கல் அருகே நல்லிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story