தினத்தந்தி செய்தி எதிரொலி, வாணியம்பாடி பாலாற்று பகுதியில் போலீஸ் பாதுகாப்பு
பாலாற்று பகுதியில் போலீஸ் பாதுகாப்பு
வாணியம்பாடி
தினத்தந்தி செய்தி எதிரொலியாக வாணியம்பாடி பாலாற்றில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்றில் தொடர் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்திலுள்ள பேத்தமங்கலம் ஏரி நிரம்பி அதன் உபரி நீர் காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடுகிறது. இதேபோல் ஆந்திராவில் பெய்த பலத்த மழையால் புல்லூர் அணை நிரம்பி வெளியேறும் நீரால், பாலாற்றில் தண்ணீர் அதிக அளவில் வருகிறது.
இதனை காண வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் குடும்பத்துடன் வந்து மேட்டுபாளையம் பகுதியில் வெள்ளத்தை பார்த்து செல்கின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
சிறுவர்கள், குழந்தைகள் ஆபத்தை உணராமல் ஆற்று வெள்ளத்தில் குளித்து வருவதாகவும், ஆற்றில் மணல் கொள்ளை காரணமாக அதிக அளவு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களில் நீர் நிரம்பி உள்ளதாலும், சிறுவர்கள், குழந்தைகள் ஆற்று நீரில் முழுகி உயிர் பலியாகும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நேற்று தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாலாற்று பகுதியிலும், மேம்பாலம் பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story