‘எத்தனை சசிகலா வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது’ விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் பேச்சு


‘எத்தனை சசிகலா வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது’ விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் பேச்சு
x
தினத்தந்தி 17 Oct 2021 10:17 PM IST (Updated: 17 Oct 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

எத்தனை சசிகலா வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என்று விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கட்சி அலுவலத்தில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

தோல்வி நிரந்தரமில்லை

மக்களின் ஆதரவோடு எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இயக்கம் தான் அ.தி.மு.க.  அவரை தொடர்ந்து ஜெயலலிதா மூலம் தற்போது வரை மக்களின் சக்தியை கொண்டுள்ள கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. 

தற்போது, 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அ.தி.மு.க., பல வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளது. தற்போதைய தோல்வி என்பது நிரந்தரமில்லை. இந்த இயக்கத்தை எத்தனை கருணாநிதி, மு.க.ஸ்டாலின் வந்தாலும் ஏதுவும் செய்ய முடியாது. எதிரிகளை கூட நேருக்கு, நேர் சந்தித்துதான் நாம் வீழ்த்தியுள்ளோம்.

அ.தி.மு.க.வை அசைக்க முடியாது

எம்.ஜி.ஆருக்கு துணையாக இருந்த நாஞ்சில் ராஜேந்திரன், சோமசுந்தரம், ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோர் கட்சிக்கு  துரோகம் செய்துவிட்டு சென்றனர். ஆனால், அவர்கள் மீண்டும் ஜெயலலிதாவிடம் வந்து சரணடைந்தனர். இவர்களை விட, இன்று சில துரோகிகள் அ.தி.மு.க.வே நாங்கள் தான் என கூறுகின்றனர். இதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

எத்தனை சசிகலா வந்தாலும், அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. சசிகலா தோற்றுவித்த அ.ம.மு.க.வையே நிலைநிறுத்த முடியவில்லை. இதில், அவர் அ.தி.மு.க.வை காப்பாற்ற போவதாக கூறி வருகிறார்.

தொண்டர்கள் ஏமாற தயாராக இல்லை 

நீங்கள் என்ன வேடம் போட்டாலும், அ.தி.மு.க., தொண்டர்கள் இன்னொரு முறை ஏமாற தயாராக இல்லை. இன்று நாம் சபதம் ஏற்க வேண்டும். எதிரிகள், துரோகிகளுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் நமது செயல்பாடு அமைய வேண்டும். 
ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேறும் வகையில், வரும் நாடாளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், பேட்டை முருகன், சுரேஷ்பாபு, ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை தலைவர் வண்டிமேடு ராமதாஸ், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர இளைஞரணி செயலாளர் பிரஸ் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story