வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற படகு கவிழ்ந்தது
நித்திரவிளை அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 13 தீயணைப்பு வீரர்கள் அதிர்ஷ்டவசமாக நீந்தி உயிர் தப்பினர்.
நாகர்கோவில்:
நித்திரவிளை அருகே வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 13 தீயணைப்பு வீரர்கள் அதிர்ஷ்டவசமாக நீந்தி உயிர் தப்பினர்.
மீட்பு படகு கவிழ்ந்தது
நித்திரவிளை அருகே உள்ள வைக்களூர் பகுதியில் நேற்று ஆற்று வெள்ளம் புகுந்ததால் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த கிராமம் தனித்தீவாக மாறியது. அங்கு 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் படகு மற்றும் கயிறு மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க 13 வீரர்கள் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர். அந்த படகு திடீரென வெள்ளப்பெருக்கில் சிக்கி இழுத்து செல்லப்பட்டது. அந்த படகை முன்னோக்கி செலுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக முயன்றனர். ஆனால், படகு சுழலில் சிக்கி கவிழ்ந்தது.
நீந்தி கரை சேர்ந்தனர்
இதனால் படகில் இருந்த வீரர்கள் தண்ணீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் மரங்கள் ஏராளம் நின்றன. அவற்றை தீயணைப்பு வீரர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பிடித்து நீந்தி கரை ஏறினர்.
இதற்கிடையே படகு வெள்ளத்தில் தாறுமாறாக அடித்து செல்லப்பட்டு அங்கிருந்த 2 மரத்தின் நடுவே சிக்கி நின்றது. சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு அங்கு தண்ணீரின் வேகம் குறைந்தது. அதன்பின்னர் படகை மீட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் வழக்கம்போல் நடந்தது.
மக்களிடம் விழிப்புணர்வு இல்லை
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும் போது, கனமழை குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் கடந்த 3 நாட்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. அதனை ஏற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களது உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். ஆனால் சிலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர்.
எனவே, வெள்ள அபாய எச்சரிக்கை சம்பந்தமாக அரசு அதிகாரிகள் எச்சரிக்கை வெளியிடும்போது மக்கள் அலட்சியம் செய்யாமல் ஒத்துழைப்பு தரவேண்டும், என்றனர்.
Related Tags :
Next Story