தொடர் விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்-படகு சவாரி செய்து உற்சாகம்


தொடர் விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்-படகு சவாரி செய்து உற்சாகம்
x
தினத்தந்தி 18 Oct 2021 3:06 AM IST (Updated: 18 Oct 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

சேலம்:
தொடர் விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.
தொடர் விடுமுறை
ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டது. 4 நாட்கள் விடுமுறையை கொண்டாட பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்தனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அவர்கள் லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று மகிழ்ந்தனர். மேலும் ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் ஏற்காட்டில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், கடைகளில் வியாபாரமும் மும்முரமாக நடந்தது. 
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
இதனிடையே நேற்று காலை முதல் ஏற்காட்டில் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்காவில் குடும்பத்தினர், நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பின. சில தங்கும் விடுதிகளில் வழக்கமான கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் சற்று சிரமத்திற்கு ஆளானார்கள்.
பூலாம்பட்டி
இதேபோல் தொடர் விடுமுறையையொட்டி பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்கு இயற்கை அழகை கண்டு ரசித்ததுடன், காவிரி ஆற்றில் படகு சவாரி செய்து குதூகலித்தனர். தொடர்ந்து அவர்கள் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.  சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி பூலாம்பட்டி பரிசல்துறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story