கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 10 கிலோ அரிசி - டி.கே.சிவக்குமார் பேச்சு


கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 10 கிலோ அரிசி - டி.கே.சிவக்குமார் பேச்சு
x
தினத்தந்தி 18 Oct 2021 3:08 AM IST (Updated: 18 Oct 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஏழைகளுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு:

விவசாயிகளுக்கு நிவாரணம்

  சட்டசபை இடைத்தேர்தலையொட்டி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சிந்தகியில் நேற்று காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

  கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த மணகுலி இறந்து 8 மாதங்கள் ஆகிறது. அதனால் இடைத்தேர்தல் வரும் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த சிந்தகி தொகுதியில் எந்த வளர்ச்சி பணிகளையும் அரசு செயல்படுத்தவில்லை. கொரோனா பரவல் நேரத்தில் விவசாயிகளுக்கு இந்த அரசு நிவாரணம் வழங்கியதா?.

தீபம் ஏற்றுங்கள்

  கூலித்தொழிலாளர்கள், டிரைவர்கள், சலவை தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இந்த அரசு உதவி செய்யவில்லை. இந்த சூழ்நிலையில் பா.ஜனதாவினர் எதற்காக ஓட்டு கேட்க வர வேண்டும்?. ரூ.1,800 கோடிக்கு நிதி உதவி தொகுப்பு திட்டத்தை எடியூரப்பா அறிவித்தார். அதன் பயன் யாருக்காவது கிடைத்ததா?. பிரதமர் மோடி ஊரடங்கை அமல்படுத்திவிட்டு, தீபம் ஏற்றுங்கள், கை தட்டுங்கள் என்று கூறினார்.

  கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட படுக்கையில் ஊழல் செய்தனர். மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்தனர். நாங்கள் சாதி அரசியல் செய்வது இல்லை. காங்கிரஸ் வேட்பாளர் அசோக் மணகுலியை 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். கர்நாடகத்தில் ஏழை மக்களின் பசியை போக்க காங்கிரஸ் உழைத்துள்ளது.

2 கோடி வேலை வாய்ப்புகள்

  சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது தலா 7 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் இந்த பா.ஜனதா அரசு அதை 5 கிலோவாக குறைத்துள்ளது. கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இருந்த வேலைகளும் பறிபோய்விட்டன. இளைஞர்கள் பக்கோடா விற்க வேண்டும் என்று மோடி சொன்னர். ஆனால் சமையல் எண்ணெய் விலை ரூ.200-க்கும் மேல் அதிகரித்துவிட்டது.

  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டிவிட்டது. கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு 25 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் ஒருவர் கூட கர்நாடகத்தின் பிரச்சினைக்காக குரல் கொடுப்பது இல்லை. மேகதாது, மகதாயி உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகள் உள்ளன.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

Next Story