கர்நாடகத்தில் நிதிநிலை சீரானால் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும் - பசவராஜ் பொம்மை அறிவிப்பு


கர்நாடகத்தில் நிதிநிலை சீரானால் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும் - பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2021 3:31 AM IST (Updated: 18 Oct 2021 3:31 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நிதி நிலை நன்றாக இருந்தால் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:
  
பெட்ரோல்-டீசல் விலை

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
  பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. மாநிலத்தின் பொருளாதார நிலையை ஆராய்ந்த பிறகு அவற்றின் விலையை குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். நிதிநிலை அதிகரித்து நன்றாக இருந்தால், பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளது. இடைத்தேர்தலையொட்டி நான் இன்று (நேற்று) முதல் பிரசாரத்தை தொடங்குகிறேன். ஹனகல் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து வாக்குகளை சேகரிக்கிறேன்.

  சிந்தகி, ஹனகல் 2 தொகுதிகளில் அதிகளவில் பிரசாரம் செய்வேன். 2 தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சங்குர் சர்க்கரை ஆலைக்கு தனி வரலாறு உள்ளது. அதை மூடுவதில் காங்கிரசாரின் பங்கு முக்கியமானது. ஹனகல் தொகுதியின் வளர்ச்சிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை என்ன செய்துள்ளார் என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். அந்த தொகுதி வளர்ச்சிக்கு ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

காங்கிரஸ் தோல்வி அடைந்தது

  அதைத்தொடர்ந்து ஹாவேரியில் பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
  எந்த ஒரு இடைத்தேர்தல் முடிவும், அடுத்து வரும் பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையாது. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, நஞ்சனகூடு, குண்டலுபேட்டை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அடுத்து நடைபெற்ற பொது தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. பொது தேர்தலில் ஒட்டுமொத்த மாநிலமே ஒரு கட்சியின் வெற்றியை தீர்மானிக்கிறது.

  இறந்த உதாசி எம்.எல்.ஏ. இந்த பகுதியில் கட்சியை பலப்படுத்தினார். இந்த தொகுதியில் ஏதாவது வளர்ச்சி அடைந்திருந்தால் அதற்கு உதாசி தான் காரணம். ஹாவேரி வளர்ச்சிக்கு அவர் அடித்தளம் அமைத்து கொடுத்தார். அரசு பல்கலைக்கழகங்களில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நியமனம் செய்யப்படுவதாக குமாரசாமி சொல்கிறார். யாரை திருப்திப்படுத்த அவர் இவ்வாறு கருத்து கூறுகிறார் என்று தெரியவில்லை.

வாக்குகளை கவர...

  ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சிக்க சித்தராமையா, குமாரசாமி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களின் வாக்குகளை கவர அவர்கள் 2 பேரும் போட்டி போடுகிறார்கள். எடியூரப்பா இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story