பூட்டிய வீட்டுக்குள் மீன்வளத்துறை அதிகாரி எரிந்த நிலையில் பிணமாக மீட்பு
பூட்டிய வீட்டுக்குள், மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பொன்னேரி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள திருவேங்கடாபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் சத்தியநாராயணன் (வயது 53). இவருடைய மனைவி பெரியநாயகி (50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தமிழ்நாடு மீன்வளத்துறை உதவி இயக்குனரான சத்தியநாராயணன், பொன்னேரி அலுவலகத்தின் கீழ் இயங்கும் சென்னை கொளத்தூர் பகுதியில் வண்ண மீன்கள் வளர்ப்பு பிரிவில் முதுநிலை ஆய்வாளராக பணி செய்து வந்தார்.
குடும்பத்தினர் அனைவரும் ஆவடியில் வசித்து வரும் நிலையில், பொன்னேரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து சத்தியநாராயணன் மட்டும் தனியாக வசித்து வந்தார். நேற்று மதியம் அவரது வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
அப்போது அவரது வீட்டில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், பொன்னேரி தீயணைப்பு மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன், உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று கொழுந்துவிட்டு எரிந்்த தீயை அணைத்தனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு மீன்வளத்துறை அதிகாரி சத்தியநாராயணன், தீயில் எரிந்து உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவலறிந்துவந்த பொன்னேரி போலீசார், சத்தியநாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story