கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
மடத்துக்குளம் அருகே வன்கொடுமை செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
மடத்துக்குளம் அருகே வன்கொடுமை செய்தவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கொலையாளிகள் யார்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்றுகாலை நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பொதுமக்கள் அளித்த மனு விவரம் வருமாறு
தாராபுரம் வீராட்சிமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த நாகராஜ் இவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
நாங்கள் அருந்ததியர் இனத்தை சேர்ந்தவர்கள். எங்களது மகன் கோபிநாத் கடந்த ஜூலை மாதம் 18ந் தேதி தாராபுரத்தில் இருந்து பூளவாடி ரோட்டில் மடத்துப்பாளையம் கன்னிமார் கோவில் அருகே மர்ம நபர்களால் ஓட, ஓட வெட்டிக் கொல்லப்பட்டான். இதுகுறித்து தாராபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் யார் என அடையாளம் கண்டறியப்படவில்லை. எங்களின் செல்போன்களை போலீசார் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கோபிநாத் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் எனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மர்ம ஆசாமி மிரட்டியுள்ளான். அதையும் போலீஸ் நிலையத்தில் தெரிவித்தும் இதுவரை கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் கண்டறியப்படவில்லை. உடனடியாக வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
தர்ணா
தாராபுரம் மூலனூர் நிலாங்காளிவலசு பகுதியை சேர்ந்த லட்சுமி மற்றும் குடும்பத்தினர் அளித்த மனுவில், கடந்த 2ந் தேதி மழை பெய்த இரவு நானும், எனது கணவர் பாலனும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதில் வீட்டின் மேற்கூரை உடைந்து எங்கள் மீது விழுந்தது. பொருட்களும் சேதமடைந்தன. நானும், எனது கணவரும் மயங்கி கிடந்தோம். அருகில் இருந்தவர்கள் எங்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் எனது காது கேட்கும் திறன் இழந்து விட்டது. வீடும் சேதமடைந்து விட்டது. எங்களுக்கு அரசு சார்பில் உதவி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மடத்துக்குளம் மெட்ராத்தி தாசார்பட்டியில் அருந்ததிய வகுப்பை சேர்ந்த விஜய் தண்டபாணி ஆகியோர் கடந்த 1-ந் தேதி பாலாறு துறைக்கு சென்றபோது அவர்களை சாதியை கூறி சின்னசாமி உள்பட 3 பேர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து தளி போலீஸ் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யாமல் இருப்பதை கண்டித்தும், அவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கக்கோரியும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அமைப்பு நிறுவனர் பவுத்தன் மற்றும் பாதிக்கப்பட்ட விஜய், தண்டபாணி உள்ளிட்டவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் அழைத்துச்சென்று மனு கொடுக்க வைத்தனர்.
மின்சாதனங்கள் பழுது
திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமி , சாந்தாமணி ஆகியோர் அளித்த மனுவில், நாங்கள் குடிசை அமைத்து குடியிருந்து வந்தோம். தீ விபத்தில் குடிசை எரிந்த போக அரசு சார்பில் தகர கொட்டகை அமைத்து கொடுத்துள்ளனர். வீட்டுக்கு மின் இணைப்பு, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்டவை இல்லை. வறுமையில் தவிக்கும் எங்களுக்கு அரசு உதவி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், இடுவம்பாளையத்தில் உதவி மின்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேலான மின் இணைப்புகள் உள்ளன. சின்னாண்டிப்பாளையம், சின்னியகவுண்டம்புதூர், மங்கலம் ரோடு, குள்ளேகவுண்டன்புதூர், கோழிப்பண்ணை, குளத்துப்புதூர், மங்கலம் பகுதியில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம், மின்தடையால் விவசாயம், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோக பொருட்கள் பழுதடைந்து வருகிறது. இப்பகுதியில் சின்னியக்கவுண்டன் புதூரில் புதிய மின் துணைநிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. மின் பழுதை சீரமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சாக்கடை கால்வாய் வசதி
மங்கலம் அக்ரகாரபுத்தூர் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தார் ரோடு, சாக்கடை கால்வாய் வசதி, குடிநீர் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் பகுதியில் முதல்கட்டமாக சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story