கேரள, கர்நாடக சுற்றுலா பயணிகளுக்கு 2 தவணை தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
ஊட்டி
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
77 நிவாரண முகாம்கள்
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
பந்தலூர், கூடலூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பொன்னானி ஆற்றில் அதிக தண்ணீர் வரத்து உள்ளதா என்று கண்காணித்து வருகின்றனர். பந்தலூரில் 77 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இரவு நேரங்களில் மழை அதிகமானால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு குழு மூலம் பொதுமக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள், கனமழையின்போது அச்சம் இருந்தால் முகாம்களில் வந்து தங்கி கொள்ளலாம். நீலகிரியில் இதுவரை வீடு, பயிர் சேதம் இல்லை.
தடுப்பூசி சான்றிதழ்
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. ஆனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சோதனைச்சாவடிகளில் சரிபார்த்த பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். நீலகிரியில் முதல் டோஸ் தடுப்பூசி 99 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா பாதித்து 90 நாட்கள் பூர்த்தி அடையாத நபர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 2-வது டோஸ் செலுத்தும் பணி 50 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
ஒத்துழைப்பு
நீலகிரியில் முதல் டோஸ் செலுத்தி 2-வது டோஸ் போட குறிப்பிட்ட நாட்களாகியும் 84 ஆயிரம் பேர் செலுத்தாமல் உள்ளனர். இந்த விவரம் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, செல்போன் மூலம் 2-வது டோஸ் செலுத்தாதவர்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 2-வது டோஸ் 18 வயதுக்கு மேல் அனைவருக்கும் செலுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
அவலாஞ்சி-8, கூடலூர்-8, தேவாலா-61, செருமுள்ளி-23, பாடாந்தொரை-24, ஓவேலி-21, பந்தலூர்-94, சேரங்கோடு-27 என மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பந்தலூரில் 9 சென்டி மீட்டர் மழை பதிவானது.
Related Tags :
Next Story