பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி
ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கண்டு ரசித்தார்.
ஊட்டி
ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கண்டு ரசித்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழகத்தில் புதிய கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என்.ரவி, 5 நாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 15-ந் தேதி வந்தார். அவர் ஊட்டி ராஜ்பவனில் தனது குடும்பத்தினருடன் தங்கி உள்ளார்
இந்த நிலையில் நேற்று ஊட்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி ஓய்வு எடுத்தார். அவரது மனைவி லட்சுமி ரவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ராஜ்பவனில் இருந்து காரில் புறப்பட்டு அவலாஞ்சிக்கு சென்றனர். அங்கு அவலாஞ்சி அணையை பார்வையிட்டு கண்டு ரசித்தனர்.
ஆர்கிட் செடிகள்
மலைகளுக்கு நடுவே தண்ணீரை தேக்கி வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அவலாஞ்சி வனப்பகுதியில் உள்ள நர்சரியில் ஆர்கிட் செடிகளை பார்வையிட்டனர். அடர்ந்த வனப்பகுதி வழியாக சாலையில் சென்றபடி இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து ராஜ்பவனுக்கு வந்தனர். தொடர்ந்து மாலையில் ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
பரதநாட்டிய நிகழ்ச்சி
தோடர், கோத்தர் ஆகிய பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து இசை கருவிகளை வாசித்தபடி நடனம் ஆடினர். தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதனை கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் குடும்பத்தினர் இருக்கையில் அமர்ந்தபடி கண்டு ரசித்தனர். பின்னர் பழங்குடியின மக்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து கவர்னர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் நீலகிரி மாவட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இன்று சென்னை பயணம்
ஊட்டியில் 5 நாள் சுற்றுப்பயணத்தை கவர்னர் ஆர்.என்.ரவி முடித்துக்கொண்டு இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் 12.25 மணிக்கு ராஜ்பவனில் இருந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் செல்கிறார்.
அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றடைகிறார். இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story