அவதூறாக பேசியதால் விரக்தி துப்புரவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை பிணத்துடன் உறவினர்கள் மறியல்; மேற்பார்வையாளர் கைது


அவதூறாக பேசியதால் விரக்தி துப்புரவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை பிணத்துடன் உறவினர்கள் மறியல்; மேற்பார்வையாளர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2021 9:44 PM IST (Updated: 18 Oct 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் அவதூறாக பேசியதால் விரக்தி அடைந்த துப்புரவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பிணத்துடன் உறவினர்கள் மறியல் செய்ததால் மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.


கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் மணி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 50). இவர் கம்பம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் உடல்நிலை சரியில்லை என மருத்துவ விடுப்பு எடுத்து இருந்தார். பின்னர் அது முடிந்து கடந்த 11-ந்தேதி வேலைக்கு வந்தார். அப்போது துப்புரவு மேற்பார்வையாளர் ஜோதிமுருகன், மணிகண்டனை பணிக்கு அனுமதிக்காமல் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 
இதில் விரக்தி அடைந்த மணிகண்டன் நாட்டுக்கல் தெருவில் உள்ள நகராட்சி கழிப்பறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆர்ப்பாட்டம்
இதையடுத்து கம்பம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், ஆதித்தமிழர் பேரவை மேற்கு மாவட்ட செயலாளர் அதியர்மணி தலைமையில் நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் துப்புரவு மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.  அப்போது மணிகண்டன் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலைமறியல்
இந்தநிலையில் மணிகண்டனின் உடல் தேனி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது கம்பம் ஆங்கூர்பாளையம் சாலை பிரிவு அருகே வந்த போது மணிகண்டனின்் உறவினர்கள், துப்புரவு மேற்பார்வையாளரை கைது செய்ய வேண்டும் என்று கோரி பிணத்துடன் அங்குள்ள கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவலறிந்ததும் உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துப்புரவு மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு மணிகண்டன் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
கைது
இதனிடையே மணிகண்டன் இறந்தது குறித்து கம்பம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மணிகண்டனை அவதூறாக பேசி தற்கொலைக்கு தூண்டியதாக துப்புரவு மேற்பார்வையாளர் ஜோதிமுருகன் மீது இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் சம்பவம் தொடர்பாக கம்பம் நகராட்சி நிர்வாகம் ஜோதிமுருகனை பணியிடை நீக்கம்(சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டுள்ளது.

Next Story