தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2021 10:04 PM IST (Updated: 18 Oct 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

சீர்காழி:
சீர்காழி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். 
அரசு மருத்துவமனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த மருத்துவமனை குறைவான டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளாக தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட 45 தற்காலிக பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வந்தது. 
மேலும் கடந்த ஆண்டு கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலாக  28 தற்காலிக பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் நேற்று தற்காலிக பணியாளர்களை 12 மணி நேரம் பணி செய்ய வேண்டும் எனவும், மேலும் கொரோனா பணிக்காக நியமனம் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர்களுக்கு பணி முடிந்து விட்டதாகவும், இனி மருத்துவமனைக்கு வர வேண்டாம் என கூறியதாக  தெரிகிறது.
உள்ளிருப்பு போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த தற்காலிக பணியாளர்கள் மற்றும் கொரோனா பணிக்காக நியமனம் செய்த பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து நேற்று காலை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது கொரோனா பணிக்காக நியமனம் செய்த பணியாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.  சம்பளம் உடனே வழங்க வேண்டும். தொடர்ந்து தங்களுக்கு பணிகள் வழங்க வேண்டும்.  தூய்மைப்பணியாளர்கள், செக்யூரிட்டி உள்ளிட்ட தற்காலிக பணியாளர்கள் தங்களுக்கு 8 மணி நேரம் தான் பணி வழங்க வேண்டும். 12 மணிநேரம் வேலை வழங்கக்கூடாது. சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. 
நோயாளிகள் பாதிப்பு
தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு  வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது  தங்களது கோரிக்கைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். ஆனாலும் தற்காலிக பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 
இந்த போராட்டத்தால் நேற்று சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் ரத்தப்பரிசோதனை, கடவுசீட்டு, கொரோனா பரிசோதனை உள்ளிட்டவைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு இடையே யார் முதலில் சிகிச்சை பெறுவது என போட்டி போட்டுக்கொண்டு முந்தி சென்றதால் நோயாளிகளுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Next Story