குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு
குடிநீர் கேட்டு விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
குடிநீர் குழாய் சேதம்
விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட கஸ்பா காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்பா காலனிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து சேதமானது. இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் சேதமடைந்த குடிநீர் குழாயை மாற்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நகராட்சி அலுவலகம் முற்றுகை
இதனால் குடிநீர் தேடி கால்கடுக்க அலைந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது பகுதிக்கு குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆணையாளர் பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் அருள்செல்வன், நகராட்சி பொறியாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், மேலாளர் அசோக்குமார் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story