அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சம்பள உயர்வு கேட்டு துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்


அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சம்பள உயர்வு கேட்டு துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2021 10:30 PM IST (Updated: 18 Oct 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் சம்பள உயர்வு வழங்கக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுக்கம்பாறை

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் சம்பள உயர்வு வழங்கக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்புரவு பணியாளர்கள்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் 450 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஆஸ்பத்திரி வளாகத்தை சுத்தம் செய்தல், குப்பைகளை தரம் பிரித்தல், கழிவறைகளை சுத்தம் செய்தல், நோயாளிகளை சக்கர நாற்காலியில் கொண்டு செல்லுதல், ஆபரேஷன் தியேட்டர் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். 

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்க வில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை வழக்கம்போல மருத்துவமனைக்கு வந்தனர்.

திடீர் போராட்டம்

அவர்கள் திடீரென சம்பள உயர்வு வழங்கக்கோரி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பணிக்குத் திரும்பினர். இந்த போராட்டம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டது.
 இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் கூறுகையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 9 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறோம். தொடக்கத்தில் எங்களுக்கு ரூ.4,300 சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது ரூ.7,000 வழங்குகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. 

உயர்த்தி வழங்க வேண்டும்

விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பலர் உள்ளனர். இந்த சம்பளத்தை வைத்து அவர்கள் குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. சம்பளத்தை உயர்த்தி தரக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தும், வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டோம். சம்பள உயர்வு வழங்க வில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Next Story