திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை; சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மருத்துவக்கல்லூரி
திண்டுக்கல்லை அடுத்த அடியனூத்து ஊராட்சி ஒடுக்கத்தில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கல்லூரியின் தரைத்தளம், மாணவர்களுக்கான வகுப்பறைகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாணவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் கல்லூரியில் செய்யப்பட்டுள்ளதா? என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 7 கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் கல்லூரிகளுக்கு மட்டும் அனுமதி பெற வேண்டும்.
மாணவர் சேர்க்கை
இது தவிர கள்ளக்குறிச்சி, விருதுநகர், ஊட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 3 மருத்துவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டுக்கு 150 இடங்களும், மற்ற 4 மருத்துவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டுக்கு 100 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளுக்கு கூடுதலாக 50 இடங்களை வழங்க வேண்டும் என்று தேசிய மருத்துவக்கழகத்திடம் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திண்டுக்கல் உள்ளிட்ட 4 இடங்களில் அமைக்கப்படும் கல்லூரிகளுக்கான கட்டுமான பணிகள் முழுமையடையாமல் உள்ளது.
இருப்பினும் இந்த கல்லூரிகளில் முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் மருத்துவக்கல்லூரியாக செயல்படுவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்ற தேசிய மருத்துவக் கழகத்தின் பரிந்துரைகளை பூர்த்தி செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் உள்ளிட்ட 4 இடங்களில் கட்டப்பட்டு வரும் கல்லூரிகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
384 பேர் சிகிச்சை
கொரோனா 2-வது அலை தொடங்கியதுமே அரசு தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டது. முதற்கட்டமாக அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தியது. இதன் காரணமாக தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை 67 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 25 சதவீதம் பேரும் போட்டுக்கொண்டுள்ளனர். விரைவில் 2 தவணை தடுப்பூசிகளும் அனைத்து தரப்பினருக்கும் போடப்பட்டுவிடும்.
இந்த நிலையில் கொரோனா 3-வது அலை பரவல் ஏற்படும் என கடந்த சில மாதங்களாக வல்லுனர்கள் குழு எச்சரிக்கை செய்து வருகிறது. இந்த அலை உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் தடுப்பூசிக்கு மட்டுமே உள்ளது. எனவே பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். டெங்கு பாதிப்பை பொறுத்தவரை தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தற்போது 384 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழனி அரசு மருத்துவமனையில் கழிப்பறைகளை முறையாக பராமரிக்காத ஒப்பந்த பணியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கலெக்டர் விசாகன், அரசு மருத்துவக்கல்லூரி டீன் விஜயகுமார், துணை முதல்வர் வீரமணி, நலப்பணிகள் இணை இயக்குனர் அன்புசெல்வன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
துப்புரவு பணியாளர்கள்
இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய ஒப்பந்த சுகாதார துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பெண் பணியாளர்கள் சுகாதாரத்துறை செயலாளரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 6 மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட சம்பளமும் குறைவாக உள்ளது. எனவே நிலுவையில் உள்ள சம்பளத்தை விரைவில் வழங்குவதுடன், கூடுதல் சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்ற ராதாகிருஷ்ணன் விரைவில் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துச்சென்றார்.
பழனியில் ஆய்வு
முன்னதாக பழனி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவமனை கட்டிட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், பழனியை பொறுத்தவரை சுற்று வட்டார மக்கள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வருவதால் பழனி அரசு மருத்துவமனைக்கு தேவையான கருவிகள், வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பழனி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் காலியாக உள்ள டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் அவர் பழனி முருகன் கோவிலில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு சென்று பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் அன்புச்செல்வன், ஆர்.டி.ஓ. ஆனந்தி, மருத்துவமனை தலைமை டாக்டர் உதயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story