ஓசூரில் மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ6¾ கோடியில் நாட்டின கோழிகள் இனப்பெருக்க வளாகம் காணொலி காட்சி மூலம் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்


ஓசூரில் மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ6¾ கோடியில் நாட்டின கோழிகள் இனப்பெருக்க வளாகம் காணொலி காட்சி மூலம் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 18 Oct 2021 10:55 PM IST (Updated: 18 Oct 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ6 கோடியே 74 லட்சத்தில் நாட்டின கோழிகள் இனப்பெருக்க வளாகத்தை காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் முகஸ்டாலின் திறந்து வைத்தார்.

மத்திகிரி:
ஓசூரில் மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ.6 கோடியே 74 லட்சத்தில் நாட்டின கோழிகள் இனப்பெருக்க வளாகத்தை காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார் 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ.6.74 கோடியில் நாட்டின கோழிகள் இனப்பெருக்க வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்துவைத்தார்.
இதையொட்டி மாவட்ட கால்நடை பண்ணை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் குத்துவிளக்கேற்றி வைத்து வளாகத்தை பார்வையிட்டனர்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
பெரும் வளர்ச்சி 
தமிழ்நாட்டில் பண்ணை முறை முட்டைக்கோழி மற்றும் கறிக்கோழி வளர்ப்புத் தொழில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. சமீபகாலமாக நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வரும் நிலையில் நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
ஓசூர், மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ.6.74 கோடி செலவில் குஞ்சு பொரிப்பகத்துடன் கூடிய நாட்டுக்கோழிப் பண்ணை தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுமார் 47.255 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோழிப்பண்ணையில் ரூ.4 கோடியே 11 லட்சம் செலவில் கோழி கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
தேவை பூர்த்தி செய்யப்படும் 
கோழிப்பண்ணை மற்றும் கோழிக்குஞ்சு பொரிப்பக உபகரணங்கள் ரூ.1 கோடியே 6 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர கோழிகள் கொள்முதல் செய்ய ரூ.8 லட்சம், தீவனம் மற்றும் இதர செலவினத்திற்காக ரூ.1 கோடியே 49 லட்சம் நிதி ஒதுக்கீடும் பெறப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இப்பண்ணை 5,100 வளரும் கோழிகள் மற்றும் 9,150 முட்டையிடும் கோழிகளை பராமரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கோழி வளர்ப்பாளர்களிடையே ஒரு நாள் வயதுடைய கோழிக்குஞ்சுகளுக்கு பெரும் தேவை உள்ளது. ஒவ்வொரு வாரமும் சுமார் 20 ஆயிரம் குஞ்சுகளை பொரிக்கும் திறனுள்ள இப்பண்ணையின் மூலம் ஆண்டிற்கு சுமார் 10 லட்சம் கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்து விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு வழங்க இயலும். இதன் மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் நாட்டுக்கோழிகளின் தேவை பெருமளவில் பூர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓசூர் உதவி கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், துணை இயக்குனர்கள் ரவிச்சந்திரன், மரியசுந்தர், உதவி இயக்குனர்கள் அருள்ராஜ், இளவரசன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் யுவராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story