காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 18 Oct 2021 5:26 PM GMT (Updated: 2021-10-18T22:56:50+05:30)

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும் கிளை ஆறான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பென்னாகரம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும் கிளை ஆறான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர் மழை
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 
சின்னாறு
இதேபோல் பென்னாகரம் அருகே உள்ள போடூர்பள்ளம், கோவில்பள்ளம், சறுக்கல்பாறை, முத்தூர்மலை மற்றும் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் கிளை ஆறான சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பென்னாகரம்-கேரட்டி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடியது.
இந்தநிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு தடையை மீறி அருவி மற்றும் காவிரி கரையோரம் குளித்தனர். பின்னர் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் ஐந்தருவி பகுதிக்கு சென்று பாறைகள் மீது நின்று ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தனர்.

Next Story