பூலாவூரணி பஞ்சாயத்து இணைக்கப்படுமா?


பூலாவூரணி பஞ்சாயத்து இணைக்கப்படுமா?
x
தினத்தந்தி 19 Oct 2021 12:49 AM IST (Updated: 19 Oct 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக அமைக்கப்பட உள்ள சிவகாசி மாநகராட்சியுடன் பூலாவூரணி பஞ்சாயத்தும் இணைக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.

சிவகாசி, 
புதிதாக அமைக்கப்பட உள்ள சிவகாசி மாநகராட்சியுடன் பூலாவூரணி பஞ்சாயத்தும் இணைக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது. 
மாநகராட்சி
தமிழக அரசு சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி மற்றும் ஆணையூர், தேவர்குளம், சாமிநத்தம், செங்கமலநாச்சியார்புரம், பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், அனுப்பன்குளம், நாரணாபுரம், சித்து ராஜபுரம் ஆகிய ஊராட்சிகளை இணைத்து புதிய மாநகராட்சி அமைக் கப்படும் என்று அறிவித்தது.
 இதற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி மாநகராட்சியில் இடம்பெற போகும் பகுதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படும் நிலையில் சிவகாசி நகராட்சியையொட்டி உள்ள பூலாவூரணி பஞ்சாயத்து மாநகராட்சிக்குள் இடம்பெற வில்லை என்று கூறப்படுகிறது. சிவகாசி நகராட்சியில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாமிநத்தம் பஞ்சாயத்தை மாநக ராட்சியுடன் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பஞ்சாயத்து நிர்வாகத்திடம் அதற்கான ஒப்புதல் கடிதம் பெற்று விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சிவகாசி நகராட்சியின் எல்லையில் உள்ள பூலாவூரணியை அதிகாரிகள் மாநகராட்சியுடன் சேர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பு
சிவகாசி மாநகராட்சியில் இடம்பெறும் 2 நகராட்சிகள், 8 ஊராட்சிகள் சிவகாசி போலீஸ் உட்கோட்டத்தில் வருகிறது. சாமிநத்தம் ஊராட்சி மட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் உட்கோட்டத்துக்குள் வருகிறது. 
சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் போலீஸ் எல்லைகள் கமிஷனர் அந்தஸ்தில் உயர்த்தப்படும். அப்போது சாமிநத்தம் பஞ்சாயத்து பகுதியில்  உள்ள மல்லி போலீஸ் நிலையமும் சிவகாசி போலீஸ் கமிஷனர் எல்லைக்குள் மாற்றப்பட வேண்டிய ஒரு நிலை உருவாகும். 
இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அதை தவிர்த்து விட்டு சிவகாசி அருகில் உள்ள பூலாவூரணியை சிவகாசி மாநகராட்சியுடன் இணைத்தால் தேவையான மக்கள் தொகை கிடைக்கும். அதேநேரத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் பூலாவூரணி பஞ்சாயத்து பகுதி மக்கள் மாநகராட்சி மக்களுக்கு கிடைக்க உள்ள அதே உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். 
எனவே விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி மாநகராட்சி எல்லையில் சேர்க்க வேண்டிய ஊராட்சிகளை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story