நிலப்பிரச்சினைக்கு பஞ்சாயத்து பேச சென்ற விவசாயி அடித்துக்கொலை வாலிபர் கைது


நிலப்பிரச்சினைக்கு பஞ்சாயத்து பேச சென்ற விவசாயி அடித்துக்கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2021 2:00 AM IST (Updated: 19 Oct 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரி அருகே நிலப்பிரச்சினைக்கு பஞ்சாயத்து பேச சென்றபோது விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மேச்சேரி,
நிலப்பிரச்சினை
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பள்ளிப்பட்டி ஐந்து புளியமரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. 
இந்த பிரச்சினை தொடர்பாக கருப்பண்ணன், காக்காச்சிவளவு பகுதியை சேர்ந்த விவசாயி மணி (60) என்பவரை பஞ்சாயத்து பேச அழைத்தார். அவரும் அதற்கு சம்மதித்தார்.
கொலை மிரட்டல்
இதையடுத்து நேற்று முன்தினம் கருப்பண்ணன், மணியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பள்ளிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் முத்துக்குமார் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.
திடீரென அவர் கருப்பண்ணன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் நிலைத்தடுமாறி கருப்பண்ணன், மணி ஆகியோர் கீழே விழுந்தனர். அப்போது முத்துக்குமார் அவர்கள் 2 பேரையும் தாக்கி, கொலை செய்துவிடுவதாக மிரட்டி சென்றார்.
வாலிபர் கைது
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில் மேச்சேரி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி மணி, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் அங்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு
கொலை செய்யப்பட்ட மணிக்கு, கருங்கன்னி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
மேச்சேரி அருகே நிலப்பிரச்சினைக்கு பஞ்சாயத்து பேச சென்ற விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Related Tags :
Next Story