1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு
கர்நாடகத்தில் 20 மாதங்களாக மூடிக்கிடந்த 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் வருகிற 25-ந்தேதி முதல் திறக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் 20 மாதங்களாக மூடிக்கிடந்த 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் வருகிற 25-ந்தேதி முதல் திறக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா 2-வது அலை
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அதே ஆண்டு இறுதியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அதே வேளையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படவில்லை.
கொரோனா 2-வது அலை காரணமாக அனைத்து பள்ளி-கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மீண்டும் மூடப்பட்டது. இந்த வைரஸ் தொற்று பரவல் குறைந்ததை அடுத்து மாநிலத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
நாகேஸ் பேட்டி
இதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளி எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதுதொடர்பாக அவ்வப்போது வதந்திகளும் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.
இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் வருகிற 25-ந் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
50 சதவீத குழந்தைகள்
கர்நாடகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு (அதாவது பி.யூ.சி.) வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. கல்வித்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி தொடக்க பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
அதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளை வருகிற 25-ந் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ளோம். மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக இந்த தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படுகிறது. முதல் ஒரு வாரம் இந்த பள்ளிகள் மதியம் வரை நடைபெற அனுமதி அளிக்கப்படும். அதன் பிறகு பள்ளிகள் முழுமையாக செயல்படும்.
1-ந்தேதி முதல் மதிய உணவு
அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி முதல் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படும். வகுப்பறைகளில் 50 சதவீத குழந்தைகளை மட்டுமே அமர வைக்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும்போது குழந்தைகளின் உடல் வெப்ப நிலையை சோதிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை மட்டுமே குழந்தைகளின் வகுப்பறைகளில் அனுமதிக்க வேண்டும். பெற்றோரின் அனுமதி கடிதத்தை குழந்தைகள் பெற்று வர வேண்டும். வகுப்பறையில் ஒரு குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அந்த வகுப்பில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்யப்படும். கடவுளின் கருணையால் மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
இவ்வாறு மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.
20 மாதங்களுக்கு பிறகு...
கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் மூடப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து 20 மாதங்களுக்கு பிறகு தொடக்கப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகளுக்கு வர குழந்தைகள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
பள்ளிகள் திறக்கப்படுவதால் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் குழந்தைகள் குதூகலத்தில் உள்ளனர். மந்திரியின் இந்த முடிவை தனியார் பள்ளிகள் வரவேற்றுள்ளன. இதற்கிடையே கர்நாடகத்தில் நீச்சல் குளங்களை 50 சதவீதம் பேருடன் செயல்படுத்தலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story