அவதூறு புகார்: சென்னை போலீசார் மீது மதுரை பெண் என்ஜினீயர் குற்றச்சாட்டு


அவதூறு புகார்: சென்னை போலீசார் மீது மதுரை பெண் என்ஜினீயர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Oct 2021 11:06 AM IST (Updated: 19 Oct 2021 11:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னை போலீசார் மீது மதுரை பெண் என்ஜினீயர் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.

சென்னை,

சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் தியாகராயநகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் கடந்த 1-ந்தேதி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடப்பதாக மசாஜ் சென்டரின் மானேஜர் ராஜேஷ் என்பவரை கைது செய்தனர். 4 பெண்கள் மீட்கப்பட்டனர். இதில் மதுரையை சேர்ந்த 22 வயது பெண் என்ஜினீயர் ஒருவரும் அடங்குவார். அவர், போலீசார் அதிகார துஷ்பிரயோகம் மூலம் தன்னை விபசாரியாக சித்தரித்துவிட்டதாக குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். 

இதுகுறித்து பெண் என்ஜினீயர் ஆதங்கத்துடன் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னுடைய தந்தை மதுரையில் நடைபாதையில் வியாபாரம் செய்து வருகிறார். அவர் என்னை கஷ்டப்பட்டு கம்ப்யூட்டர் என்ஜினீயராக படிக்க வைத்தார். கொரோனாவால் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற மசாஜ் சென்டர் பற்றி ‘ஆன்லைன்’ விளம்பரம் தயாரிப்பு பணி கிடைத்தது. 

என்னுடைய முதல் மாத சம்பளத்தை வாங்குவதற்காக கடந்த 1-ந்தேதி மசாஜ் சென்டருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு வந்த விபசார தடுப்பு பிரிவு போலீசார் என்னையும் அழைத்து வந்து விட்டனர். ஒரு தவறும் செய்யாத என்னை போலீசார் விபசாரியாக சித்தரித்து அவமானப்படுத்திவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவரது தரப்பு வக்கீல் ஸ்ரீதர், இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்திலும், மனித உரிமை ஆணையத்திலும் புகார் மனு அளித்துள்ளோம் என்றார்.

Next Story