ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு; 2 பேர் தப்பி ஓட்டம்
ஸ்ரீபெரும்புதூரில் மேலும் ஒரு பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்து 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
திருவள்ளுவர் மாவட்டம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 26). பிரேம்குமார் தனது மனைவி தாமரை செல்வியுடன் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தாமரைச்செல்வி கழுத்திலிருந்த 5 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்து மின்னல் வேகத்தில் பறந்தனர்.
இதையடுத்து அவர்களை பிரேம்குமார் துரத்தி சென்றும் மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர். இது குறித்து பிரேம் குமார் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்.
கடந்த சில நாளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் பெண்ணிடம் துப்பாக்கி முனையில் தங்க நகையை பறித்து சென்று ஏரிப் பகுதியில் பதுங்கிய வடமாநில வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டர் செய்தனர்.
இந்நிலையில் தற்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 மர்ம நபர்கள் பெண்ணிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வடமாநில கொள்ளையர்கள் தொழிலாளர்கள் போர்வையில் வேலை செய்து தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுகிறார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கி வேலை செய்யும் வட மாநிலத் தொழிலாளர்களின் ஆவணங்களை வீடு, வீடாக சென்று போலீசார் சரிபார்த்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story