எட்டயபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் விரலி மஞ்சள் பறிமுதல் 2 வாலிபர்கள் கைது
எட்டயபுரம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் விரலி மஞ்சளை பறிமுதல் செய்ததுடன் இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே, போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் விரலி மஞ்சளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மஞ்சள் கடத்தல்
இலங்கையில் விரலி மஞ்சள், ஏலக்காய், வெங்காய விதை ஆகியவற்றுக்கு 100 சதவீத இறக்குமதி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையில் சுங்க வரி ஏய்ப்புக்காகவும், கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காகவும் தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் இருந்து விரலி மஞ்சள், ஏலக்காய், வெங்காய விதைகள் உள்ளிட்டவைகளும், அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா, பீடி இலைகள் ஆகியவற்றையும் படகுகளில் கடத்த முயற்சிப்பதும், அவற்றை போலீசார் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சரக்கு ஆட்டோ
இந்தநிலையில், எட்டயபுரம் அருகே விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது தலைமையிலான தனிபிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிந்தலக்கரை அருகே வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ நிற்காமல் சென்றது. இதனால் உஷார் அடைந்த போலீசார் விரட்டிச்சென்று அந்த சரக்கு ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினர். அப்போது அதில் இருந்து 2 பேர் தப்ப முயன்றனர். உடனே அந்த 2 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.
37 மூட்டைகள்
பின்னர் சரக்கு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் தலா 35 கிலோ வீதம் 37 மூட்டைகளில் விராலி மஞ்சள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சமாகும்.
இதையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் மதுரை நூல் சாலை இஸ்மாயில்புரம் 8-வது தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஹக்கிம் சுல்தான் (வயது 31), மதுரை நெல்பேட்டை கைமார் ராவுத்தர்தோப்பை சேர்ந்த நாகூர்மீரான் மகன் இப்ராஹீம் ஷா (36) என்பது தெரியவந்தது.
கைது
தொடர்ந்து நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதி வழியாக படகு மூலமாக விரலி மஞ்சளை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சுமார் 1.5 டன் விரலி மஞ்சள் மூடைகளையும் பறிமுதல் செய்தனர்.
-----------
Related Tags :
Next Story