வனத்துறை அனுமதி கிடைத்ததால் 2 வருடங்களுக்கு பிறகு தொடங்கிய தார்சாலை பணி பொதுமக்கள் மகிழ்ச்சி


வனத்துறை அனுமதி கிடைத்ததால் 2 வருடங்களுக்கு பிறகு தொடங்கிய தார்சாலை பணி  பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 19 Oct 2021 8:14 PM IST (Updated: 19 Oct 2021 8:14 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே காமராஜபுரத்தில் வனத்துறை அனுமதி கிடைத்ததால் 2 வருடங்களுக்கு பிறகு தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடமலைக்குண்டு:
வருசநாடு அருகே காமராஜபுரம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை சேதமடைந்து இருந்தது. இந்தநிலையில் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காமராஜபுரத்திற்கு புதிய தார்சாலை அமைக்க அரசு உத்தரவிட்டது. இதற்காக பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக காமராஜபுரம் வரை சில இடங்களில் தரை பாலங்கள் கட்டும் பணி நடைபெற்றது. பின்னர் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. 
அப்போது தார்சாலை அமைக்கும் இடங்களில் சில பகுதிகள் வன கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் சாலை பணிக்கு வருசநாடு வனத்துறையினர் தடை விதித்தனர். பின்னர் தொடர்ந்து 2 வருடங்களாக வனத்துறையினர் தடையை நீக்கவில்லை. மேலும் பழைய தார்சாலை தோண்டி அகற்றப்பட்டிருந்ததால் காமராஜபுரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் சேவையும் நிறுத்தப்பட்டது. எனவே வெளியூர் செல்லும் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் விவசாயிகள் விளை பொருட்களை தேனி, சின்னமனூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்க காலதாமதம் ஏற்பட்டது. 
இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் வனத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து புதிதாக தார்சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். அதன்பேரில் கடந்த சில நாட்களாக காமராஜபுரம்-வருசநாடு வரை புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். 2 வருடங்களுக்கு பிறகு புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதால் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story