சிறுபாக்கம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது


சிறுபாக்கம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2021 2:52 PM GMT (Updated: 19 Oct 2021 2:52 PM GMT)

சிறுபாக்கம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனா்.


கடலூர், 

வாகன சோதனை

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுபாக்கம் சோதனை சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை மறித்து, அதில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். இதில் அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள், வேப்பூர் அடுத்த மங்களுரை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 39), பொயனப்பாடியை சேர்ந்த மணி (42) என்பதும், கோழி தீவனத்திற்காக சிறுபாக்கம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை சேலம் மாவட்டத்திற்கு கடத்திச் சென்றபோது சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், மணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் 1½ டன் எடை கொண்ட 30 மூட்டை ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Next Story