சோழர் கால நடுகல் கல்வெட்டுகள் கண்டெடுப்பு


சோழர் கால நடுகல் கல்வெட்டுகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 19 Oct 2021 9:11 PM IST (Updated: 19 Oct 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையின் புதிய வரலாற்றைக் கூறும் சோழர் கால நடுகல் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையின் புதிய வரலாற்றைக் கூறும் சோழர் கால நடுகல் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. 

ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவரும், கூடலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் வே.நெடுஞ்செழியன் அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், முனைவர் எ.சுதாகர், பழனிசாமி, மதன்மோகன் ஆகியோர் கூட்டாக திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலையருகே அமைந்துள்ள வேடியப்பன் கோவிலில் ஆய்வு செய்தனர். 

அப்போது அங்கு நடுகல் கல்வெட்டு, முதலாம் பராந்தகன் கல்வெட்டு, எதிரே உள்ள சிலையில் ஒரு வரி கல்வெட்டு என மொத்தம் 3 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. 

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

 நடுகல்லின் பின்புறம் கி.பி. 928 ஆண்டில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டில் வரலாற்றுக்கு பல புதிய தகவல்கள் தரும் செய்திகள் கிடைத்துள்ளன.

 அதன்படி இன்றைக்கு 1093 ஆண்டுகள் பழமை உடையதாக இக்கல்வெட்டு விளங்குகிறது. இக்கல்வெட்டில் பராந்தகன் இருமுடி சோழனுக்கும், அவரின் மனைவியும் இப்பகுதியை ஆட்சி செய்த சிற்றரசன் வைரமேக வாணகோவரையரின் மகள் செம்பியன் மாதேவிக்கும் பிறந்தவர் கண்டராதித்த சோழர் என்று கண்டாதித்தர் பிறப்பு பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. 

இதிலிருந்து பராந்தக சோழருக்கும், வைரமேக வாணகோவரையர் மகளுக்கும் பிறந்தவர் கண்டராதித்தர் என்பது தெளிவாக புலனாகிறது. 

மதிய உணவு பூஜை

இருப்பினும் திருக்கோவிலூர் அருகே உள்ள கரடி என்ற ஊரில் கி.பி. 947-ல் எழுதப்பட்டுள்ள முதலாம் பராந்தகன் கல்வெட்டு இவருக்கும் சோழ மாதேவி என்பவரும் மகனாகப் பிறந்தவர் கண்டராதித்தர் என்று கூறுகிறது.

 இதிலிருந்து செம்பியன் மாதேவி சோழ மாதேவி என்னும் பெயர்கள் ஒருவரையே சுட்டுகிறது என்று கருதலாம். 

மேலும், இக்கல்வெட்டு அருணாசலேஸ்வரருக்கு மதிய உணவு பூஜை படையலின் அதே நேரத்தில் இருபது காபாலிக துறவிகளுக்கும் உணவு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக கண்டராதித்தர் வைச்சபூண்டி என்ற ஊர் முழுவதையும் துறவிகளுக்கு கொடுத்துள்ளார். 

இதன் மூலம் கண்டராதித்தர் காபாலிக சைவ வழி துறவிகளையும் ஆதரித்துள்ளார் என்று அறிய முடிகிறது. காபாலிகளர்களின் ஆச்சாரியராக அதாவது குருவாக வல்லக்கொன்றை சோமீசுவரர் கங்காளபடாரர் என்பவர் இருந்துள்ளார். இவரும் இவருடைய சீடர் வாஜஸ்பதி வக்கானி படார முதலிகளும் இவருடைய சிஷ்யர்கள். இந்த சிஷ்யர்களின் சிஷ்யர்கள் ஆகியோரும் வைச்சபூண்டி கிராமத்தில் இருந்து கிடைக்கும் வரி, பொன் மற்றும் நிலங்களை அனுபவிக்க வேண்டும் என்றும் இக்கல்வெட்டு கூறுகிறது.

பராந்தகன் காலம்

இதிலிருந்து சைவத்தின் ஒரு பிரிவாக விளங்கிய காபாலிகம் காளாமுகம் ஆகியவை திருவண்ணாமலையில் பராந்தகன் காலத்தில் அரச ஆதரவு பெற்று சிறப்புடன் இருந்தது என்பதை அறிகிறோம். அப்பிரிவினை கண்டராதித்தர் ஆதரித்தார் என்பதையும் அறிகிறோம். 

வைச்சபூண்டி கிராமத்தை காபாலிகர்களின் கையில் இருக்கும் கபால ஓட்டில் நீர் வார்த்து கண்டராதித்தர் தர்மமாக கொடுத்துள்ளார். காளாமுகம், காபாலிகம் ஆகிய சமய பிரிவுகள் திருவண்ணாமலை பகுதியில் பரவி விளங்கியதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது‌. 

கண்டராதித்த சோழர் வைரமேக வாணகோவரையர் குடும்பத்து இளவரசிக்கு பிறந்தவர் என்ற புதிய தகவலை இக்கல்வெட்டு கூறுகிறது. பராந்தக சோழருக்கு இருமுடி சோழன் என்ற பட்டம் இருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிகிறோம். 

இந்த கல்வெட்டு அமைந்துள்ள நடுகல் சோழர்கால சிற்ப அமைதி கொண்ட நடுகல்லாகும். இதில் வீரன் தனது வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் வைத்து கொண்டு உள்ளார். வீரனின் தலையில் கரண்ட மகுடமும் காதில் பெரிய குண்டமும் இடுப்பில் கச்சை ஆடையும் வாள் உறையும் உள்ளது. இரண்டு கால்களும் மடக்கி எதிரியை தாக்க ஓடுவது போல அழகுடன் அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த சிற்பத்திற்கு கீழ் இரண்டு வரிக்கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இதில் "ஒருபத்தாவது புதநாட்பாடி நாட்டு" என்று எழுத்து மட்டும் படிக்கும்படி உள்ளது. மற்றவை பொரிந்துபோயுள்ளன. இந்த கோவிலின் எதிரில் உள்ள சிறிய அளவு சிற்பத்தில் ஆண், பெண் என 2 உருவங்கள் உள்ளன.

இந்த உருவங்களின் மேல்புறத்தில் ஒரு வரி கல்வெட்டு காணப்படுகிறது. இந்த கல்வெட்டில் ஸ்ரீமாஹேஸ்வர நம்பி என்று பொறிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாஹேஸ்வர நம்பி என்பவர் சிவனின் பக்தராகலாம். இந்த கல்வெட்டைப் படித்தும் விளக்கம் அளித்த கல்வெட்டறிஞர்கள் சு.ராகோபால் மற்றும் இல. தியாகராஜன், சு.ராஜவேல் ஆகியோர் இந்த கல்வெட்டு அரிய புதிய செய்திகளைக் கொண்டிருக்கும் சிறப்பான கல்வெட்டும் என்றும் தெரிவித்தனர். 

திருவண்ணாமலை நகரிலே கிடைத்த இந்த நடுகல் கல்வெட்டும் பின்புறம் உள்ள கல்வெட்டும், எதிரே உள்ள கல்வெட்டும் வெவ்வேறு காலத்தியது ஆகும். இந்த கல்வெட்டுகள் மூலம் திருவண்ணாமலை கோவில் வரலாறு பற்றியும் வைச சமயப் பிரிவான கபாலிகம், காளமுகம் பற்றியும், கண்டராதித்தன் பிறப்பு பற்றியும் குறிப்பிடும் சிறப்பான கல்வெட்டாகும். 

இந்த கல்வெட்டுகளை அரசு ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story