‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 Oct 2021 4:28 PM GMT (Updated: 19 Oct 2021 4:28 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

நெல்லை டவுன் ஏ.பி.மாடத்தெருவில் வாறுகாலில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி, தெருவில் வழிந்தோடுகிறது. அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் முகம் சுளிக்கின்றனர். மேலும் சுகாதாரக்கேடு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, வாறுகால் அடைப்பை நிரந்தரமாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரேவதி, நெல்லை டவுன்.

குண்டும் குழியுமான சாலை

நெல்லை பழைய பேட்டை இசக்கியம்மன் கோவில் முதல் டவுன் ஆர்ச் வரை சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில்கூட செல்ல முடியாமல் ஆமை வேகத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைவாக செல்ல முடிவதில்லை. ஆகவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
சொ.பாலகிருஷ்ணன், நெல்லை டவுன்.

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி யூனியனுக்கு உட்பட்ட இடைகால் விலக்கு பகுதியானது, நான்கு பிரதான சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இந்த பகுதியில் நான்கு திசைகளில் இருந்தும் வரக்கூடிய வாகன ஓட்டிகளும், பஸ்சில் இருந்து இறங்கி வரும் மக்களும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் போதிய மின்விளக்கு வசதியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால், உயர்கோபுர மின்விளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
இசக்கிமுத்து, இடைகால்.

மோட்டாரை இயக்க சுவிட்ச் அமைக்கப்படுமா?

பாளையங்கோட்டை யூனியன் சிவந்திப்பட்டி கிராமம் அம்பேத்கர் தெருவில் குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. மின் இணைப்பு நேரடியாக வரக்கூடிய இணைப்பை பொருத்தி தான் மோட்டாரை இயக்க முடிகிறது. இதனால் மின்சாரம் தாக்கும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. கடந்த 2 வருடங்களாக இந்த நிலை தான் நீடிக்கிறது. எனவே, குடிநீர் தொட்டிக்கு என்று தனியாக சுவிட்ச் அமைத்து கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மு.பேச்சிமுத்து, சிவந்திப்பட்டி.

படுமோசமான சாலை

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மங்கம்மாள் சாலையில் பால் பண்ணை பகுதியில் இருந்து காமாட்சி அம்மன் கோவில் வரை சாலை படுமோசமாக உள்ளது. மழைக்காலத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் உள்பட பாதசாரிகளும் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
புவனா, பாரதிநகர்.

பாதாள சாக்கடையில் கசிவு

நெல்லை மாநகராட்சி 19-வது வார்டு தியாகராஜநகர் 6-வது வடக்கு தெருவில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள பகுதியில் பாதாள சாக்கடை மூடி போட்டு மூடப்பட்டுள்ளது. தற்போது அதில் இருந்து கழிவுநீர் கசிந்து சாக்கடையாக தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களும், ஈக்களும் மொய்ப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே இதனை சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கே.முத்து, தியாகராஜநகர்.

தெருவிளக்கு எரியவில்லை

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் கீழக்கடையம் பஞ்சாயத்து வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது. பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகிறார்கள். எனவே, தெருவிளக்குகள் எரிவதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.திருக்குமரன், கடையம்.

வேகத்தடை அமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி நாராயண சுவாமி கோவில் முன்பு மற்றும் வாலவிளை வடக்கு தெருவில் அமைந்துள்ள அம்மன் கோவில் முன்பும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் வளைவுகளில் வேகமாக செல்கின்றன. எனவே, அந்த இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
எஸ்.பாலமுருகன், ஆறுமுகநேரி.

ஆபத்தான மின்கம்பம்

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதிக்கு உட்பட்ட எம்.சவேரியார்புரம் அம்மா உணவகம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த ஆண்டு மழைக்காலத்தில் சாய்ந்த மின்கம்பம், தற்போது சரிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் எல்.இ.டி. மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ள நிலையில் இரவு நேரத்தில் சரிவர எரிவதில்லை. எனவே, ஆபத்தான மின்கம்பத்தின் அடிப்பகுதியில் காங்கிரீட் போட்டு நேராக மாற்றி வலுவாக அமைக்கவும், மின்விளக்கு எரிவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
பா.முத்துராமன், முத்தையாபுரம்.

Next Story