பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க ரூ.14½ கோடியில் தூண்டில் வளைவு மீனவர்களிடம் கருத்து கேட்ட கலெக்டர் தகவல்
பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க ரூ.14½ கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று மீனவர்களிடம் கருத்து கேட்ட கலெக்டர் மோகன் தெரிவித்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் கடற்கரையையொட்டி அமைந்துள்ளது பிள்ளைச்சாவடி கிராமம். இந்த கிராமத்தில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வந்தது.
இதனால், கடற்கரையையொட்டி அமைந்துள்ள வீடுகளில் மண் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் மற்றும் கரையோரம் நிறுத்தி வைக்கட்டு இருக்கும் மீன்பிடி படகுகளும் சேதமடைந்து வந்தன.
எனவே கடல் அரிப்பை தடுக்கும் பொருட்டு, அந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைத்திட வேண்டும் என்று மீனவ கிரம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, அரசு அங்கு தூண்டில் வளைவு அமைக்க முடிவு செய்தது.
கலெக்டர் ஆய்வு
இதையொட்டி அந்த கிராமத்தில் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று, தூண்டில் வளைவு அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, இது தொடர்பாக மீனவர்களிடம் கருத்து கேட்கும் வகையில் கிராமத்தில் கருத்து கேட்பு கூட்டமும் கிராமத்தில் நடத்தப்பட்டது.
மீனவர்களின் கருத்தை கேட்டறிந்த கலெக்டர் மோகன், இங்கு கருங்கற்களால் ஆன, தூண்டில் வளைவு அமைக்கப்பட உள்ளது. இதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மீன்வளத்துறையின் வாயிலாக நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.14.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அரசாணை வெளியாக இருக்கிறது என்றார்.
அப்போது, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story