தர்மபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் அமைச்சர் ஆய்வு


தர்மபுரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Oct 2021 10:16 PM IST (Updated: 19 Oct 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விடுதிகளில் திடீர் ஆய்வு
தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று அதியமான்கோட்டை மாணவர் விடுதி, தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர் மற்றும் மாணவிகள் விடுதி, தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாணவிகள் விடுதி ஆகியவற்றில் ஆய்வு செய்தார். பின்னர் தர்மபுரி ராமக்காள் ஏரிக்கரை அருகில் உள்ள மாணவிகள் விடுதி, அன்னசாகரம் பகுதியில் உள்ள மாணவர் விடுதி ஆகியவற்றில் அவர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருந்த மாணவ, மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து பென்னாகரம் மாணவர் விடுதி, மாமரத்துப்பள்ளம் கிராமத்திலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவிகள் விடுதி, பாப்பாரப்பட்டி மாணவர் விடுதி ஆகிய விடுதிகளை பார்வையிட்ட அமைச்சர் பெரியூர் மலைப்பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாலை வசதி
இந்த ஆய்வின்போது அமைச்சர் கூறுகையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். விடுமுறை நாள் என்பதால் ஒருசில விடுதிகளில் குறைந்தளவு மாணவ, மாணவிகள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தேன். அன்னசாகரம் மாணவர் விடுதிக்கு சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி வேண்டும் என்று கேட்டுள்ளனர். 
இதேபோல் தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சிறு, சிறு குறைபாடுகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவ, மாணவிகள் விடுதிகளுக்கு செல்லும் சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாமரத்துப்பள்ளம் அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர் விடுதி வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் எடுத்துக் கூறி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த ஆய்வின் போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம், தர்மபுரி நகர பொறுப்பாளர் அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் தர்மபுரி சுற்றுலா மாளிகையில் கலெக்டர் திவ்யதர்சினி மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Next Story