விளைநிலங்களை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு
மயிலாடுதுறை அருகே மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டரிடம் மனு
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை, மகாராஜபுரம், பாண்டூர், பொன்னூர், அருள்மொழிதேவன் ஆகிய ஊராட்சிகளில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்து விட்டன.
இந்த நிலங்களில் மீண்டும் சாகுபடிக்கு விதை நெல், உரங்கள் ஆகியவற்றை வழங்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் சோழம்பேட்டை, மகாராஜபுரம், பாண்டூர், பொன்னூர், அருள்மொழிதேவன் ஆகிய 5 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுகுறித்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவரிடம் விவசாயிகள் மழையால் சேதடைந்த பயிர்களை காண்பித்து, உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக வடிகால் வாய்க்காலை தூர்வாரி தேங்கியுள்ள நீரை அகற்றவும், மீண்டும் இந்த நிலங்களில் பயிரிட தேவையான விதைநெல், உரங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தரவும் வலியுறுத்தினர். அப்போது வேளாண் வட்டார இயக்குனர் சங்கரநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story