உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கள்ளக்காதலன் உதவியுடன் தீர்த்து கட்டிய மனைவி மதுக்கடை முன்பு உடலை போட்டு நாடகமாடியது அம்பலம்


உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த  தொழிலாளியை கள்ளக்காதலன் உதவியுடன் தீர்த்து கட்டிய மனைவி மதுக்கடை முன்பு உடலை போட்டு நாடகமாடியது அம்பலம்
x
தினத்தந்தி 19 Oct 2021 10:39 PM IST (Updated: 19 Oct 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கள்ளக்காதலன் உதவியுடன் தீர்த்து கட்டியதாக மனைவியையும் கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

ராயக்கோட்டை:
ராயக்கோட்டையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை,
கள்ளக்காதலன் உதவியுடன் தீர்த்து கட்டியதாக மனைவியையும்,
கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை பற்றிய விவரம் வருமாறு:-
தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள குட்டூரை சேர்ந்தவர் மாரப்பன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் நேற்று முன்தினம் ராயக்கோட்டை தக்காளிமண்டி அருகில் உள்ள மதுக்கடை முன்பு இறந்து கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்தது.
இதுதொடர்பாக அவரது மனைவி குண்டம்மாள் (35) ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதில் ‘தனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. என்னிடம் மது குடிக்க பணம் கேட்டார். நான் பணம் கொடுக்கவில்லை. இதனால் வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவர், வேறு யாரிடமோ பணம் வாங்கி அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு, போதையில் தவறி விழுந்து இறந்துள்ளார்’ என கூறியிருந்தார்.
தலையில் தாக்கி கொலை
இந்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாரப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாரப்பன் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 
அதன் முடிவில் மாரப்பன் தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். முதல் கட்டமாக இறந்து போன மாரப்பனின் மனைவி குண்டம்மாளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
மனைவி உள்பட 2 பேர் கைது
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அதில் குண்டம்மாள், தனது கள்ளக்காதலன் சிவசங்கர் (31) என்பவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து குண்டம்மாளையும், சிவசங்கரையும் போலீசார் கைது செய்தனர். கைதான குண்டம்மாள் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
எனக்கும், மாரப்பனுக்கும் திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். எனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடித்து விட்டு வந்து அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார். இந்தநிலையில் எனக்கும், சஜ்ஜலப்பட்டியை சேர்ந்த விவசாயி சிவசங்கர் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
தனிமையில் உல்லாசம்
சிவசங்கருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். சிவசங்கர் என்னை அடிக்கடி தனிமையில் வந்து சந்தித்து உல்லாசமாக இருப்பார். இது எனது கணவருக்கு தெரிய வந்தது. அவர் என்னை பல முறை கண்டித்தார். இதனால் அவர் இருக்கும் வரையில் நாம் உல்லாச வாழ்க்கை வாழ முடியாது. எனவே அவரை தீர்த்து விடலாம் என்று எனது கள்ளக்காதலனுக்கு ஐடியா கொடுத்தேன். 
இதையடுத்து நான் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி கடந்த 17-ந் தேதி இரவு மது குடிப்பதற்காக வெளியே சென்ற எனது கணவரை, சிவசங்கர் அழைத்து சென்றார். அப்போது மது போதையில் இருந்தபோது எனது கணவரின் பின்புற தலையில் நான் இரும்பு கம்பியால் அடித்தேன். இதில் அவர் இறந்தார். இதையடுத்து தக்காளி மண்டி அருகில் டாஸ்மாக் கடை முன்பு உடலை போட்டு விட்டு நாங்கள் சென்று விட்டோம்.
போலீசார் பிடித்து விட்டனர்
இதையடுத்து மறுநாள், காணாமல் போன எனது கணவரை தேடியதாகவும், அதில் எனது கணவர் உடல் மதுக்கடை அருகில் கிடந்ததாக நானே தெரிவித்தேன். என்னிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து விட்டு எனது கணவர் சென்றதாகவும், பின்னர் மது போதையில் கீழே விழுந்து இறந்ததாகவும், அனைவரையும் நம்ப வைத்தேன்.
ஆனால் எனது கணவரின் தலையில் இருந்த காயத்தை கொண்டு, அவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்ததை போலீசார் கண்டுபிடித்து என்னை பிடித்து விட்டனர். 
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
ராயக்கோட்டையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலன் உதவியுடன் மனைவியே தீர்த்து கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story