பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேக விழா
பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று அன்னாபிஷேக விழா நடக்கிறது.
மீன்சுருட்டி:
அன்னாபிஷேகம்
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரா் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது ஆகும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டதாகும். 13½ அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட பிரமாண்டமான அந்த சிவலிங்கத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுா்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
லிங்கத்தின் மீது சாற்றப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் சக்தியை பெற்று, அந்த சாதம் சிவலிங்கமாகவே கருதப்படும் என்பதால், பக்தா்கள் ஒரே நேரத்தில கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.
அன்னக்காப்பு அலங்காரம்
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கடந்த ஆண்டு அன்னாபிஷேகத்திற்கு பதிலாக கோவிலில் சிவலிங்கத்திற்கு அன்னக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமி நாளான இன்று(புதன்கிழமை) சிவலிங்கத்திற்கு வழக்கம்போல் அன்னாபிஷேகம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அதற்கான அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக, அன்னாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை செய்ய முடியாத காரணத்தால், இந்த ஆண்டும் அன்னக்காப்பு அலங்காரமே நடைபெற உள்ளது. 37-ம் ஆண்டு அன்னாபிஷே விழாவையொட்டி அன்னக்காப்பு அலங்காரத்திற்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனா்.
பக்தர்களுக்கு பிரசாதம்
அதன்படி இன்று காலை 7 மணிக்கு கணக்க விநாயகருக்கு மகா அபிஷேகமும், அதைத்தொடர்ந்து காலை 9 மணியளவில் பிரகதீஸ்வரருக்கு 21 வகையான பொருட்களால் மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் பிரகதீஸ்வரருக்கு மாலை 3 மணி அளவில் அன்னம் சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து மாலை 6 மணியளவில் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட உள்ளது. இரவு 8 மணிக்கு மேல் சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்ட சாதம் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சாதத்தை சாப்பிட்டால் நோய்கள் குணமாகி, குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
விழாவையொட்டி பிரகதீஸ்வரா் கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசலை தவிப்பதற்காக போலீசாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ முகாம் மற்றும் கழிப்பிட வசதிகள் ஆகியவை பக்தா்களுக்காக செய்யப்பட்டுள்ளது. தற்போது ேகாவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அன்னாபிஷேக விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story